ஆனைமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

ஆனைமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு;

Update:2021-12-30 22:34 IST
பொள்ளாச்சி

மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி நிலையம் மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்றது.

 இதற்கு பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துறை சார்ந்த திட்டங்கள் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதல் சிறு, குறு தொழில் முறைப்படுத்தும் திட்டம் குறித்து அவர் பேசினார். 

ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கிட்டங்கி, இருப்பு வசதி, பொருளீட்டு கடன், மின்னணு தேசிய வேளாண் திட்டம், விலை ஆதரவு திட்டம் குறித்து பேசினார். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சிவக்குமார் தென்னை மற்றும் பண்ணை உற்பத்தி, சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கி கூறினார். 

மேலும் விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் நீரா உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில் வேளாண் வணிக துறையின் உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். 

இதற்கிடையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் விவசாய வணிக பணி அனுபவத்திற்காக கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்