டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி
டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி;
பொள்ளாச்சி
டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு பாகன்கள் கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.
யானைகள் முகாம்
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் வளர்ப்பு யானைகள் மற்றும் கும்கி யானைகள் உள்பட 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதைதவிர வனப்பகுதியில் ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் கும்கி பயிற்சி பெறாத யானைகளுக்கும், சீனியர் யானைகளுக்கும் கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
27 யானைகள் பராமரிப்பு
கடந்த 1850-ம் ஆண்டு வனத்துறை உபயோகத்திற்கு யானைப்படை உருவாக்கப்பட்டது. பின்னர் 1874-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் யானைகளை பிடித்தல் தொடங்கப்பட்டது.
1956-ம் ஆண்டு வரகளியாறில் யானைகள் முகாம் தொடங்கப்பட்டது. 1972-75-ல் யானை பிடிக்கும் செயல்முறையானது யானை கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறையாக்கப்பட்டது.
1975-ல் இருந்து யானை முகாம் முக்கிய பயிற்சி மற்றும் யானை பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் கும்கி யானை கலீம் உள்பட 27 யானைகள் பயிற்சி அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் வயது, எடை மற்றும் செயலுக்கு தகுந்தவாறு கால்நடை டாக்டரின் பரிந்துரையின்படி உணவு வழங்கப்படுகிறது.
கும்கி பயிற்சி
டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்தல், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, தள்ளுவது, காட்டு யானைகளை லாரியில் ஏற்றுவது, கூண்டில் அடைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதற்காக ஒரு கயிற்றை தரையில் விரித்து, அந்த கயிற்றின் மீது நடந்து செல்லுதல், கயிற்றை பிடித்து இழுத்தல், மரக்கட்டையை காலால் எட்டி உதைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் போது பாகன்களின் உத்தரவை வளர்ப்பு யானைகள் கடைப்பிடிக்கிறது.
வளர்ப்பு யானைகளுக்கு தினமும் அரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். மற்ற நேரங்களில் வனப்பகுதியில் ரோந்து செல்லப்படும். பயிற்சிக்கு பிறகு சிறப்பாக செயல்படும் யானைகள் கும்கியாக மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.