வால்பாறையில் முதியவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
வால்பாறையில் முதியவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு;
வால்பாறை
வால்பாறை நகர் பகுதியில் 68 வயது முதியவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதியவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் பாபுலட்சுமண் மேற்பார்வையில், துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குழுவினர் அந்த பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் சிறப்பு மருத்துவ குழுவினர் முதியவருடன் தொடர்பில் இருந்து 35 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்க அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசு உற்பத்தியாகும் வகையில், குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள 60 வயது மூதாட்டி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.