முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவையில் பதுங்கல்?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவையில் பதுங்கி உள்ளாரா? என்று தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.;

Update:2021-12-31 19:29 IST
கோவை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவையில் பதுங்கி உள்ளாரா? என்று தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

மோசடி வழக்கு

ஆவின் நிறுவனம் மற்றும் பிற அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கடந்த 17-ந் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

கோவையில் பதுங்கல்?

கடந்த 18-ந் தேதி முதல் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் தீவிரமாக தேடியும், அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு கோவையிலும் நட்பு வட்டாரம் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அவர் அங்கு பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையொட்டி விருதுநகர் இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்பட 8 பேர் கொண்ட தனிப்படையினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவை வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கோவை பெரியகடை வீதிக்கு சென்று ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தகவல் இல்லை

இது தவிர தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துப்பாளையம், ஓணாப்பாளையம், நல்லூர் வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தனர். 

அப்போது ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார்?, அவர் பற்றி தகவல் ஏதேனும் தெரியுமா? என்பன போன்ற கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும் அவர் குறித்த எந்த தகவலும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. 

மேலும் செய்திகள்