டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் பொள்ளாச்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு
டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் பொள்ளாச்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு;
பொள்ளாச்சி
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
நோய் எதிர்ப்பு சக்தி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி பொதுமக்களிடம் உள்ளதா? என்று கண்டறிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பரிசோதனை செய்ய வேண்டிய இடங்களும் தேர்வு செய்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் நடராஜ் மணியகாரர் வீதி, மண்டபம் ரோடு, மாக்கினாம்பட்டி ரோடு ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த பகுதிகளில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரத்த மாதிரிகள் சேகரிப்பு
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சியில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
கடந்த 3 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதேபோன்று வால்பாறை நகராட்சி பகுதியிலும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை கோவையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகள் மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவுகளை மாநில அளவில் சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.