கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஆபத்தான 21 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஆபத்தான 21 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்;

Update:2021-12-31 21:31 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஆபத்தான 21 பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.

பள்ளி கட்டிடங்கள் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடித்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டிடங்கள் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், கிணத்துக்கடவு ஒன்றிய நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

21 கட்டிடங்கள் இடித்து அகற்றம்

இதனைத்தொடர்ந்து கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், சமையல் அறை, சுற்றுச்சுவர், கழிப்பறை, அங்கன்வாடி கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 27 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் மிகவும் மோசமானதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

தொடர்ந்து அந்த கட்டிடங்களை பொக்லைன் மூலம் இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை மொத்தம் 21 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. 

இந்த பணிகளை கிணத்துக்கடவு ஒன்றிய ஆணையாளர் தனலட்சுமி,  உதவிபொறியாளர்கள் உலகநாதன், தங்கவேல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் செந்தில், சரசு, மல்லிகா, செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

மீதமுள்ள 6 கட்டிடங்களும் விரைவாக இடித்து அகற்றப்படும் என்று ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்