வால்பாறையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க தனியார் விடுதி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்
வால்பாறையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க தனியார் விடுதி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்;
வால்பாறை
வால்பாறையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க தனியார் விடுதி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
வால்பாறை போலீஸ் சார்பில் தனியார் விடுதி, காட்டேஜ் உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதிய உருமாறிய ஒமைக்காரன் வைரஸ் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வால்பாறைக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் விடுதியில் தங்கினால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்
விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளார்களா?, சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அடிக்கடி கிருமிநாசினிகள் மூலம் அறைகளை சுத்தம் செய்ய வேண்டும். வால்பாறையில் எந்தவிதமான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், மதுபான விழாக்களுக்கும் அனுமதியில்லை என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். தங்கம் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்கள், போதை பொருட்களை வழங்கக்கூடாது.
இரவில் சுற்றுலா பயணிகளை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. சந்தேகப்படும் படியாக யாரும் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க விடுதி உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் வால்பாறை, முடீஸ், சேக்கல்முடி, காடம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதி, காட்டேஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.