நிதி நிறுவன அதிபர் வீட்டில் 64 பவுன் நகைகள் திருடிய டிரைவர் கைது

வடவள்ளியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் லாக்கரை உடைத்து 64 பவுன் நகைகளை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-12-31 22:40 IST
வடவள்ளி

வடவள்ளியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் லாக்கரை உடைத்து 64 பவுன் நகைகளை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிதி நிறுவன அதிபர்

கோவையை அடுத்த வடவள்ளி சோமையம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியம். நிதி நிறுவன அதிபர். இவர், தனது நண்பரான காளப்பட்டியை சேர்ந்த பொன் முடி என்பவருடன் சேர்ந்து கடந்த 5 வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து தொழில் செய்து வந்தனர்.

சுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு, கனடாவில் வசித்து வரும் மகன்கள் மற்றும் மகள்களை பார்ப்பதற்காக சென்றார். முன்னதாக அவர், தனது நிதி நிறுவனம், வீடு மற்றும் காரை தனது உதவியாளர் மற்றும் டிரைவரான பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அந்தோணிஜோசப்பின் (39) பொறுப்பில் விட்டுச் சென்றார்.

டிரைவர் மீது சந்தேகம்

இதற்கிடையே கொரோனோ காரணமாக அவரால் உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை. ஆனாலும் சுப்பிரமணியமும், பொன்முடியும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாலை பொன்முடியிடம் சுப்பிர மணியம் பேசினார். அப்போது, டிரைவர் அந்தோணியை தொடர்பு கொண்டால் கடந்த ஒருவாரமாக பேசுவதை தவிர்ப்பதாகவும், அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

தங்க நகைகள் பறிமுதல்

இதையடுத்து பொன்முடி சோமையம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டின் கதவு முன்பு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்முடி மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது பற்றி அவர், சுப்பிரமணியத்திடம் தகவல் கூறினார். 

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம், தனது வீட்டு லாக்கரில் தங்க காசுகள் உள்பட 64 பவுன் தங்க நகைகள் வைத்திருந்ததாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்தோணியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த 64 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்