கோவையில் 77 போக்சோ வழக்குகள் பதிவு

கடந்த ஆண்டில் கோவையில் 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.;

Update:2021-12-31 22:40 IST
கோவை

கடந்த ஆண்டில் கோவையில் 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தவறான கருத்துகள்

கோவையில் கலெக்டர் உத்தரவின்படி புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

சாதி, மத ரீதியாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

இயங்காத சிக்னல்கள்

தற்போது முகத்தை வைத்து குற்றவாளிகளை ஆய்வு செய்யும் செயலி  செயல்பாட்டில் உள்ளது. இரவு நேர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஈடுபட கோபர்கன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த முறைக்கு தேர்வான போலீசார், அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்காணிப்பார்கள். சாலைகளில் இயங்காமல் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உள்ளோம்.

77 போக்சோ வழக்குகள்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 13 பாலியல் பலாத்கார வழக்குகளும், 8 துன்புறுத்துதல் வழக்குகளும், 5 கடத்தல் வழக்குகளும், 132 பெண் வன்கொடுமை தடுப்பு வழக்குகளும், 27 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன. 

இது தவிர 18 கலவர வழக்குகளும், 114 கஞ்சா வழக்குகளும், 1,594 புகையிலை பொருட்கள் விற்ற வழக்குகளும், 130 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவாகின. இதேபோன்று 59 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 1,872 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்