கோவைக்குள் நுழைந்தது ஒமைக்ரான்

கோவைக்குள் ஒமைக்ரான் நுழைந்தது. லண்டனில் இருந்து வந்த முதியவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.;

Update:2021-12-31 22:40 IST
கோவை

கோவைக்குள் ஒமைக்ரான் நுழைந்தது. லண்டனில் இருந்து வந்த முதியவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

ஒமைக்ரான் நுழைந்தது

கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கிறது. சென்னையில் ஒமைக்ரானால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கோவையில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதை சுகாதாரத்துறை உறுதி செய்தது.

அதாவது லண்டனில் இருந்து கடந்த 20-ந் தேதி விமானம் மூலம் கோவை வந்த 69 வயது முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி உள்ளார். தற்போது தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளது. அவர் நல்ல நிலையில் உள்ளார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் மற்றும் வசித்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் 118 பேர் பாதிக்கப்பட்டு, 66 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கோவை உள்பட மாநிலம் முழுவதும் 52 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.

70 பேருக்கு கொரோனா

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் கொரோனா முன் எச்சரிக்கையில் தீவிர கவனம் செலுத்துமாறும் கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் நேற்று 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 2 லட்சத்து 53 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 93 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 248 பேர் குணமடைந்தனர். தற்போது 904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

4 பேர் பலி

நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 72 வயது முதியவர், அரசு மருத்துவமனையில் 34 வயது மற்றும் 52 வயது ஆண்கள், 75 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,515 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்