துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1.37 கோடி தங்கம் மீட்பு

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1.37 கோடி தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-05 22:02 GMT
பெங்களூரு:

தங்கம் கடத்தல்

  பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகளிடமும், அவர்களது உடைமைகளிலும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

  பின்னர் சந்தேகத்தின்பேரில் அந்த விமானத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் ஒரு பை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

ரூ.1.37 கோடி தங்க கட்டிகள்

  அந்த பையில் சோதனை நடத்தியபோது தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையில் மொத்தம் 24 தங்க கட்டிகள் இருந்தது. அவற்றின் எடை 2 கிலோ 800 கிராம் ஆகும். சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள், துபாயில் இருந்து தங்க கட்டிகளை சட்டவிரோதமாக பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர்.

  தற்போது கொரோனா காரணமாக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்மநபர்கள் விமானத்தின் இருக்கைக்கு அடியிலேயே, அவற்றை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்மநபர்கள், இருக்கைக்கு அடியில் தங்க கட்டிகளை வைத்துவிட்டு, அவற்றை வேறு சிலர் மூலமாக எடுத்து செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  இதையடுத்து, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகளின் பெயர், மற்ற விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெறவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

  இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்க கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்