போலீஸ் நிலையத்தில் மதுவிருந்துடன் குத்தாட்டம்: உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம்

போலீஸ் நிலையத்தில் மது விருந்துடன் குத்தாட்டம் போட்ட வழக்கில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-01-05 22:23 GMT
மங்களூரு:

மங்களூரு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் மது அருந்தி குத்தாட்டம் ஆடியதாக மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை போலீஸ் கமிஷனர்கள் ஹரிராம் சங்கர், ரஞ்சித் பாண்டாரு ஆகியோருக்கு சசிகுமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்கள் விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சசிகுமாரிடம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். 

அந்த அறிக்கையில், மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 போலீஸ்காரர்கள் மது அருந்தியதுடன், நடனமாடியதும் உறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கையுடன் போலீஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவும் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என 5 பேரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சசிகுமார் உத்தரவிட்டார்.  இதேபோல, போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த மற்றொரு மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரோசம்மாவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்