மேகதாதுவில் அணை கட்ட கோரி காங். இன்று பாதயாத்திரை; ராமநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

மேகதாதுவில் அணை கட்ட கோரி காங்கிரஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ராமநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.;

Update:2022-01-09 02:37 IST
பெங்களூரு:

காங்கிரஸ் பாதயாத்திரை

  காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதி(அதாவது இன்று) கனகபுராவில் இருந்து பெங்களூரு நோக்கி பாதயாத்திரை நடத்தப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் சார்பில் கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.

  இந்த பாதயாத்திரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த பாதயாத்திரையை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைக்க உள்ளார். கனகபுராவில் இருந்து பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானம் வரை 165 கிலோ மீட்டர் தூரம் வரை, இந்த பாதயாத்திரை ஒட்டு மொத்தமாக 11 நாட்கள் நடக்க உள்ளது.

பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

  இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்த கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

  காங்கிரஸ் பாதயாத்திரைக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் பா.ஜனதா தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பாதயாத்திரை நடத்தப்படும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் ஆலோசனை

  இந்த நிலையில், காங்கிரசின் பாதயாத்திரையை தடுக்கும் நோக்கத்திலேயே ராமநகரில் 144 தடை உத்தரவும், வார இறுதி ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கை மீறி பாதயாத்திரை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவும் எச்சரித்துள்ளார்.

  ஆனாலும் பாதயாத்திரையை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகிறார்கள். இதையொட்டி கனகபுராவில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரையை நடத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்தனர்.

டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார்

  அதே நேரத்தில் கனகபுரா அருகே உள்ள சங்கமம் பகுதிக்கு நேற்று மதியம் டி.கே.சிவக்குமார் சென்றார். அங்கு அமைக்கப்பட்ட மேடை, பிற பகுதிகளை அவர் பார்வையிட்டார். காவிரி ஆற்றையொட்டி ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து கொள்ளும் வகையில் அங்கு மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. பாதயாத்திரை தொடங்கும் பகுதியில் மின்விளக்கு அலங்காரங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பேனர்களுமாக காட்சி அளிக்கிறது.

  இதற்கிடையில், பாதயாத்திரை தொடங்க உள்ள பகுதியை பார்வையிட்ட டி.கே.சிவக்குமார், பாதயாத்திரை வெற்றி பெறுவதற்காக கனகபுராவில் உள்ள கெங்கேரம்மா கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தியும் அவர் வழிபட்டார். இதற்கிடையே ஊரடங்கின் போது கோவிலுக்கு சென்று டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம் செய்து விதிமுறைகளை மீறி இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

144 தடை உத்தரவு

  இந்த நிலையில், ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் மாவட்டத்தில் 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ராமநகர் மாவட்ட கலெக்டரும், காங்கிரசின் பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், தடை விதித்தும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.

  இதற்கிடையில், கனகபுராவில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் சென்றார். அங்கு டி.கே.சிவக்குமாரை சந்தித்து பாதயாத்திரைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதால், பாதயாத்திரை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாா். மாவட்ட கலெக்டர் வழங்கிய நோட்டீசையும் டி.கே.சிவக்குமாரிடம் கொடுத்தார். இதற்கு டி.கே.சிவக்குமாரிடம் இருந்து உரிய பதில் வராததால், அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் புறப்பட்டு வந்தார்.

குவியும் தொண்டர்கள்

  ராமநகரில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு இருந்தாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நானும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆகிய 2 பேர் மட்டுமாவது பாதயாத்திரை நடத்துவோம், எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை என்று டி.கே.சிவக்குமாா் தெரிவித்துள்ளார். காங்கிரசின் பாதயாத்திரைக்கு கன்னட திரையுலகம், கன்னட அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

  இதையடுத்து, அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அனுமதி இல்லை

  இந்த பாதயாத்திரை குறித்து ராமநகர் போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

  கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநகரில் இருந்து பாதயாத்திரை செல்ல காங்கிரசாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பாதயாத்திரை நடத்த மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் எதுவும் கூறவில்லை.

  தடையை மீறி பாதயாத்திரை நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. பாதயாத்திரையை தொடங்கினால், அப்போதுள்ள சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை எடுப்போம்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்