ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

வால்பாறையில் கடும் வெயில் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 151 அடியாக சரிந்தது.;

Update:2022-01-10 20:15 IST
வால்பாறை

வால்பாறையில் கடும் வெயில் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 151 அடியாக சரிந்தது. 

சோலையாறு அணை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மேலும் அவ்வப்போது தமிழகம் மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் உருவான புயல் காரணமாக வால்பாறைக்கு கூடுதல் மழை கிடைத்தது.

இதன் காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் ஜூலை மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக 186 நாட்களாக சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே இருந்தது.

நீர் வரத்து குறைந்தது

இந்த நிலையில் வால்பாறையில் குளிர் பனி மற்றும் கடுமையான வெயில் கொண்ட காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்தது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இது தவிர சோலையாறு மின்நிலையம்-1 இயக்கப்பட்டு 398 கன அடி நீர் பரம்பிக்குளம் அணைக்கும், மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 413 கன அடி நீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் திறந்து விடப்படுகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் மேலும் குறைகிறது. அங்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 151 அடியாக இருந்தது.

பராமரிப்பு பணி

இதற்கிடையில் சோலையாறு அணையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதனால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்