கோவை
கோவை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட காரமடை, கூடலூர், மது க்கரை, கருமத்தம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 134 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சிகளாக தரம் உயர்வு
கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மது க்கரை ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் சமீரன் வெளியிட்டார்.
இதில் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 19,877 பேரும், 20,511 பேர், 3-ம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 393 வாக்காளர்கள் உள்ளனர்.
காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 14,900 பேரும், பெண் வாக்காளர்கள் 15,842 பேரும் 3-ம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 747 பேர் உள்ளனர்.
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 14,982 ஆண் வாக்காளர்கள், 15,286 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 270 வாக்காளர்களும்,
மதுக்கரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 13,989 பேரும், பெண் வாக்காளர்கள் 14,732 பேரும், 3-ம் பாலினத்தவர் 28 ஆயிரத்து 724 பேரும் உள்ளனர்.
வாக்குச்சாவடிகள்
இந்த நகராட்சியில் வாக்காளர்கள் வாக்காளிக்க வசதியாக ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுவாக்குச்சாவடிகளும் உள்ளன.
ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் இருப்பார்கள்.
இதன்படி கூடலூர் நகராட்சியில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 22-ம், பொதுவாக்குச்சாவடி 5 என மொத்தம் 49 வாக்குச்சாவடிகளும்,
காரமடையில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 12-ம் பொது வாக்குச்சாவடிகள் 15 என மொத்தம் 39 வாக்குச்சாவடிகளும், கருமத்தம்பட்டியில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 9-ம்,
பொது வாக்குச்சாவடிகள் 18 என மொத்தம் 36 வாக்குச்சாவடிகளும், மதுக்கரையில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 8-ம், பொது வாக்குச்சாவடிகள் 19-ம் என மொத்தம் 35 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கோவையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளிலும் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 51-ம், பொது வாக்குச்சாவடிகள் 57 என மொத்தம் 159 வாக்குச்சாவடிகளும்,
ஆண் வாக்காளர்கள் 63 ஆயிரத்து 748 பேரும், பெண் வாக்காளர்கள் 66 ஆயிரத்து 371 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 15 பேர் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 134 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.