தினசரி 60 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு
தினசரி 60 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு;
கருமத்தம்பட்டி
புதிய கூலி உயர்வை அமல்படுத்த கோரி 3-வது நாளாக விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் விசைத்தறி நகரமான சோமனூர் வெறிச்சோடியது.
முதல் வேலை நிறுத்தம்
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து வருவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி காலை 6 மணி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் அரசு அறிவித்த புதிய ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) 3-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினசரி ரூ.60 கோடி இழப்பு
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இப்பிரச்சினையால் விசைத்தறி ஓட்டுபவர்கள், தார் ஓட்டுபவர்கள், அச்சு பிணைத்தல், பீஸ் மடிப்பவர்கள், ஜாப்பர்கள் என 13 விசைத்தறித் தொழிலோடு தொடர்புடைய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
பொங்கல் திருநாள் வரும் நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் தொழில் சார்ந்தவர்களை மட்டுமின்றி சார்பு தொழிலாளர்களையும் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளது.
எதிர்பார்ப்பு
விசைத்தறி தொழில் நகரமாக சோமனூர் சற்று வட்டார பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையில் தை பொங்கல் திருநாள் நெருங்கும் சூழ்நிலையில் விசைத்தறி நகரம் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து நிற்பது தொழில் சார்ந்த அனைவரையும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
மாநில முதல்-அமைச்சர், அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர், தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் விரைந்து இந்த பிரச்சினை தீர்வு ஏற்பத்தி தர வேண்டும் என்பதே விசைத்தறியாளர்களின் ஒரே எதிர்பார்பாக உள்ளது.