ஆன்லைனில் ‘கேம்’ விளையாடியதை கண்டித்து செல்போனை பெற்றோர் மறைத்து வைத்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

ஆன்லைனில் ‘கேம்’ விளையாடியதை கண்டித்து செல்போனை பெற்றோர் மறைத்து வைத்ததால் விரக்தி அடைந்த பிளஸ்-1 மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-01-11 15:42 IST
பிளஸ்-1 மாணவன்

சென்னை வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மகன் விமல்குமார் (வயது 16). இவர், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவன் விமல்குமார், வீட்டில் எந்தநேரமும் செல்போனில் ‘கேம்’ விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். ஆனால் பெற்றோர் சொல்வதை கேட்காமல் மீண்டும் அவர் செல்போனில் ‘கேம்’ விளையாடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், விமல்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து, வீட்டில் மறைத்து வைத்துவிட்டனர். பின்னர் அதே பகுதியில் நடந்த உறவினர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்றுவிட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த விமல்குமார், பெற்றோர் சென்றபிறகு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபிறகு வீட்டுக்கு திரும்பி வந்த அவரது பெற்றோர், பூட்டிய வீ்ட்டுக்குள் தங்கள் மகன் விமல்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீசார், விமல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்