கடும் போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-01-13 16:25 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி சத்திரம் வீதியில் கரும்பு, மஞ்சள் குலை, பூக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பொதுமக்கள் கூட்டத்தால் சத்திரம் வீதி களைகட்டியது. இதற்கிடையில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். 

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி நகரம் மட்டுமல்லாது கிராமங்களில் இருந்து சத்திரம் வீதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வந்தனர். இதற்கிடையில் லாரிகளை ரோட்டில் நிறுத்தி பொருட்களை இறக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொருட்களை வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தினார்கள்.

போலீஸ் கண்காணிப்பு இல்லை

இதனால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மேலும் பொதுமக்கள் கூட்டம் இருந்தும் கார் உள்ளிட்ட வாகனங்களை சத்திரம் வீதிக்குள் அனுமதித்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதேபோன்று புத்தாடைகள் வாங்குவதற்கு வந்த கூட்டத்தால் கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு நகர கிழக்கு போலீஸ் நிலையம் உள்ளது. ஆனால் கடை வீதி, சத்திரம் வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு இல்லை. நான்கு சக்கர வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே பண்டிகை காலங்களில் போலீசார் முக்கிய வீதிகளில் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்