பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.

Update: 2022-01-13 16:51 GMT
கோவை

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. மல்லிகை கிலோ ரூ.2,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவையில் உள்ள கடைவீதி, டவுன்ஹால், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 

இவர்கள் கரும்பு, பானை, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவாரம்பூ, பனங்கிழங்கு, அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் மற்றும் கலர் கோலப்பொடி உள்பட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர். 

பொங்களுக்கு முதல் நாளான நேற்று ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், டி.கே.மார்க்கெட், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, உக்கடம் பழ மார்க்கெட், ராஜவீதி மற்றும் கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது.

மல்லிகை கிலோ ரூ.2,600

நேற்று கோவை பூ மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டன. நேற்று காலை 11 மணியளவில் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் கூட்டம் அதிகரித்தது. 

இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

இதன்படி நேற்று மல்லிகை கிலோ ரூ.2,600, முல்லை ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.1,200, பட்டன் ரோஸ் மற்றும் செவ்வந்தி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.160, துளசி ரூ.40 என விலை சற்று அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதே சமயத்தில் நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்ற அரளிப்பூ நேற்று ரூ.300 ஆக விலை குறைந்தது.

பூஜை பொருட்கள் விற்பனை

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பழங்கள், காய்கறிகள், இளநீர், கரும்பு என அனைத்து பொருட்களும் அங்கு கிடைத்ததால் பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 

அங்கு ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50, கொய்யா ரூ.60, ஆப்பிள் ரூ.190, மாதுளை ரூ.150, சாத்துக்குடி ரூ.55, பூவன் ரூ.40, ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்க முடியவில்லை. 

இந்த நிலை கடைசி நாளான நேற்று ஒப்பணக்கார வீதி கிராஸ்கட் வீதி ஆகிய இடங்களில் ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் வாங்கினார்.
இதேபோல் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் இருந்த பூஜை பொருட்கள் விற்பனை கடையில் சாமி படங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்