கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் ‘அபேஸ்’
வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் ‘அபேஸ்’ செய்த மர்ம ஆசாமிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கிணத்துக்கடவு
வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் ‘அபேஸ்’ செய்த மர்ம ஆசாமிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்குவாரி உரிமையாளர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். கல்குவாரி உரிமையாளர். இவரது வீட்டுக்கு டிப்-டாப் உடையணிந்த 5 மர்ம ஆசாமிகள் நேற்று மதியம் காரில் வந்தனர். பின்னர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து, பஞ்சலிங்கத்திடம் ‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்’ என்றுக்கூறி ஒரு அடையாள அட்டையை காண்பித்தனர்.
மேலும் அவரை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு, படுக்கை அறைக்கு சென்ற அந்த ஆசாமிகள், அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை எடுத்தனர். பின்னர் நாளை(இன்று) காலை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கூறிவிட்டு அதே காரில் தப்பி சென்றனர். மேலும் தங்களுடன் அவரது ஜி.எஸ்.டி. புத்தகம், 5 காசோலைகள், விலை உயர்ந்த செல்போன், சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிக்ஸ் ஆகியவற்றையும் எடுத்து சென்றனர்.
3 தனிப்படைகள்
அடுத்தடுத்த நிமிடங்களில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பஞ்சலிங்கம், கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார், கல்குவாரி உரிமையாளரை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த ஆசாமிகளை வலவைவீசி தேடி வருகின்றனர்.