முழு ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.;
வால்பாறை
முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முக்கிய சுற்றுலா தலங்கள்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை மற்றும் நல்லமுடி எஸ்டேட் ஆகிய பகுதிகள் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. இங்கு கோவை, ஈரோடு, நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு வெளிமாநலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கிறார்கள். இவர்கள் சோலையாறு அணையின் அழகை ரசிப்பதோடு, அங்கு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்வார்கள். குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறையில் உள்ள விடுதி மற்றும் காட்டேஜ்களில் தங்கி இயற்கையை ரசித்து செல்வார்கள். சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் வாழ்வாதாரம் நடத்தி வந்தனர்.
வெறிச்சோடின
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக தமிழக அரசு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அறிவித்து உள்ளது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு குறைந்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் கடந்த 6-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் ஏற்கனவே வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று முழு ஊரடங்கு காரணமாக விடுதிகளில் முடங்கினார்கள்.
மேலும் சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு மற்றும் நல்லமுடி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனுமதியின்றி சுற்றியவர்களை வால்பாறை போலீசார் எச்சரித்து அனுப்பினாா்கள்.
கோவை குற்றாலம்
இதேபோன்று கோவையில் காணும் பொங்கல் நாளில் கோவை குற்றாலம் பொதுமக்களால் சூழ்ந்து காணப்படும். இங்கு கோவை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், கோவை குற்றாலம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நுழைவு பாதையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
------------------