மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் குவிந்த மதுபிரியர்கள்
திருவள்ளுவர் தினம் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்.;
2 நாட்கள் மூடப்பட்ட மதுக்கடைகள்
திருவள்ளுவர் தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நேற்றும், இன்றும் 2 நாட்கள் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மதுக்கடைகள் நேற்றும் (சனிக்கிழமை), இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள அயல்நாட்டு மதுக்கடையில் நேற்று முன்தினம் மது பிரியர்கள் அதிக அளவில் திரண்டனர்.
அவர்கள் தங்களுக்கு பிடித்த பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மதுவகைகளை இருப்பு வைத்து 2 நாட்கள் குடிப்பதற்காக அதிக அளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது. மது பிரியர்கள் பலர் தங்களுக்கு பிடித்த மதுவகைகள் எங்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் முண்டியடித்து கொண்டு சென்று மது வாங்கி சென்றதை காண முடிந்தது.
கூடுதல் மது வகைகள் கொள்முதல்
குறிப்பாக மதுபிரியர்கள் கேட்கும் மதுவகைகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக அயல்நாட்டு மதுக்கடை நிர்வாகம் காஞ்சீபுரம் டாஸ்மாக் கிடங்கில் இருந்து கூடுதல் மதுவகைகளை பெட்டி, பெட்டியாக கொள்முதல் செய்து அங்குள்ள கடையில் இருப்பு வைத்து இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பலர் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை பைகளில் வாங்கி சென்றதை காண முடிந்தது. முன்னதாக மதுக்கடைகளுக்கு வந்தவர்கள் கைகளை சுத்தம் செய்ய மதுக்கடை நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி வழங்கப்பட்டது.
முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்களுக்கு பிடித்த விஸ்கி, பீர், ரம் போன்ற மதுவகைகளை வாங்கி சென்றதையும் காண முடிந்தது.