குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை

குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-01-16 19:57 IST
கத்திக்குத்து

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சம்பந்தம் நகரை சேர்ந்தவர் பத்மகுரு (வயது 37), அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சிந்து (30), பத்மகுருவுக்கும் குன்றத்தூரை சேர்ந்த மீனா (29), என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருப்பதாக கூறி பத்மகுருவின் மனைவி சிந்து நேற்று முன்தினம் இரவு மீனாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா மற்றும் அவரது கணவர் ரஜினி, உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு பத்மகுருவின் வீட்டுக்கு சென்று இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்மகுரு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து குத்தியதில் மீனாவின் உறவினர் குமரன் (33), விஷ்வா (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சாவு

இதில் குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். விஷ்வா காயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கைது

கொலை செய்யப்பட்ட குமரன் ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் பிட்டராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் பத்மகுருவை குன்றத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்