ரூ.7½ லட்சம் அபராத தொகை மோசடி

கோவையில், கட்டிட விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் வசூலித்த ரூ.7½ லட்சம் அபராத தொகையை மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2022-01-16 22:15 IST
கோவை

கோவையில், கட்டிட விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் வசூலித்த ரூ.7½ லட்சம் அபராத தொகையை மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

அபராத தொகை மோசடி

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அதிகாரியாக பணியாற்றியவர் சத்ய பிரபா(வயது 55). அதே அலுவலகத்தில் பில்கலெக்டராக பணியாற்றியவர் யுவராஜ். இவரிடம், கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 61 மற்றும் 64-வது வார்டில் விதிமீறி கட்டிடங்கள் கட்டியவர்களிடம் அபராத தொகை வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் யுவராஜ், 61-வது வார்டில் 18 பேரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 205 மற்றும் 64-வது வார்டில் 17 பேரிடம் வசூலிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 225 அபராத தொகையை போலி பில் மற்றும் போலி முத்திரையை பயன்படுத்தி வசூலித்துவிட்டு, மாநகராட்சி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்து இருக்கிறார். இதற்கு, உதவி வருவாய் அதிகாரி சத்ய பிரபா உடந்தையாக இருந்து உள்ளார்.

பணியிடை நீக்கம்?

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில், மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், உதவி வருவாய் அதிகாரி சத்ய பிரபா, பில்கலெக்டர் யுவராஜ் ஆகியோர் மீது கூட்டுசதி(120(பி)), ஆவணமோசடி(167), போலி ஆவணம் தயாரித்தல்(465), போலி ஆவணத்தை உண்மையானது என்று ஏமாற்றுதல்(471), கணக்கை அழித்து ஏமாற்றுதல்(477(ஏ)) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெறுகிறது.

இதில், யுவராஜ் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் உதவி வருவாய் அதிகாரி சத்ய பிரபா, கிழக்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்