கொரோனா பரிசோதனை தீவிரம்
கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.;
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும் கடந்த வாரம் 500-க்கும் கீழே இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, தற்போது 1,750-க்கும் மேல்கடந்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருவதால் கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் ரெயில்வே துறையினர் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பரிசோதனை
இதனிடையே கோவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பெயர் விவரங்கள், முகவரி செல்போன் எண்கள் பெறப்படுகிறது. கடந்த வாரம் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்த வடமாநில பயணிகள் சுமார் 700-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் இந்த வாரமும் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்
கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. செல்போன் மூலமாக அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்த உத்தரவிட்டு உள்ளனர். பரிசோதனைக்கு பின்னர் கோவையில் இருந்து வெளியூர் சென்று இருந்தாலும், பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால் அவர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு அச்சத்தால் கோவையிலுள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் மீண்டும் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.