கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகளை வைத்துள்ளனர்
குடோனில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் வைப்பு;
போத்தனூர்
கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகளை வைத்துள்ளனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
குடோனில் பதுங்கிய சிறுத்தை
கோவையை அடுத்த மதுக்கரை வனச்சரகம் சுகுணாபுரம், மதுக்கரை, அய்யப்பன் கோவில் வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைத்தனர்.
சில இடங்களில் கேமராக்களை பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோன் ஊழியர்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று காலை பணிக்கு திரும்பினர். அவர்கள், குடோன் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது குடோனுக்குள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் குடோன் கதவை உடனடியாக பூட்டி விட்டு வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வன அலுவலர் தினேஷ்குமார் மற்றும் வனத் துறையினர் விரைந்து வந்தனர்.
கூண்டுகள் வைப்பு
அவர்கள் குடோன் உள்ளே கண்காணித்த போது ஒரு சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அந்த குடோனுக்குள் சென்று வர 2 வழிகள் உள்ளன. எனவே அந்த 2 வழியையும் மறித்து வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அந்த கூண்டுகளுக்குள் மாட்டிறைச்சி வைக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வரவழைக் கப்பட்டனர்.
அவர்கள், சிறுத்தையை பிடிக்கும் வகையில் தங்களின் கைகளில் வலையை பிடித்தபடி தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் அந்த சிறுத்தை குடோனை விட்டு வெளியே வர வில்லை. குடோனுக்கு உள்ளேயே பதுங்கி இருந்து கொண்டது.
யாரும் செல்ல வேண்டாம்
இது பற்றிய தகவல் பரவிய உடன் சிறுத்தையை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருக்கும் குடோன் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது
மதுக்கரை, சுகுணாபுரம், எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல நாய்களை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.
அதை பிடிக்க ஏற்கனவே 3 இடங்களில் கூண்டு வைத்து இருந்தோம். அதில் சிறுத்தை சிக்க வில்லை.
தற்போது சிறுத்தை பதுங்கி இருக்கும் குடோனில் 6 அறைகள் உள்ளன. அவை அனைத்தும் உயரம் குறைந்த வை.
எனவே மேற்கூரை யை பிரித்து உள்ளே இறங்கி சிறுத்தையை பிடிக்க முடியாத நிலை உள்ளது.
மயக்க ஊசி செலுத்த முடிவு
சிறுத்தை தப்ப முடியாதபடி குடோனை சுற்றி வலை கட்டப்பட்டு உள்ளது. குடோன் வாசலிலும் கூண்டு வைத்து உள்ளோம்.
பொதுவாக சிறுத்தைகள் இரவு நேரத்தில்தான் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வரும்.
எனவே இன்று (நேற்று) இரவுக்குள் சிறுத்தை சிக்கி விட்டால் சத்தியமங்கலம் அல்லது ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கொண்டு விடப்படும்.
இரவிற்குள் சிக்கவில்லை என்றால் நாளை (இன்று) குடோனுக்குள் புகுந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.