வால்பாறை எஸ்டேட் பகுதியில் மதுக்கூடமாக மாறிய நிழற்குடைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி உள்ளது.;
வால்பாறை
வால்பாறை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி உள்ளது.
பயணிகள் நிழற்குடைகள்
வால்பாறையில் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் பயணிகளின் வசதிக்காக 85 இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால் எஸ்டேட் பகுதியில் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கும்போது இந்த நிழற்குடைகளை பயன்படுத்தி வந்தனர். எனவே அவை பொதுமக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்தது.
மதுக்கூடமாக மாறியது
இந்த நிலையில் எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறிவிட்டது. இங்கு சுற்றுலா வருபவர்களின் சிலர் இந்த நிழற்குடைகளுக்குள் அமர்ந்து மது அருந்துவதுடன், காலி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக நிழற்குடைகளுக்குள் உடைந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள் நிறைந்து அதற்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவும் அபாய நிலையும் இருந்து வருகிறது.
இது குறித்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவு
இந்த பகுதியில் உள்ள நிழற்குடைகளை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ரூ.1 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிழற்குடைகளை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக வால்பாறையில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நிழற்குடைகளில்தான் அதிகளவில் மதுபாட்டில் கள் கிடக்கின்றன. இங்கு எப்போது சிலர் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் வனவிலங்குகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருபவர்கள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.