கோவையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா நடை பெற்றது

முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா;

Update:2022-01-18 20:02 IST

வடவள்ளி

கோவையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா நடை பெற்றது.  மருதமலை முருகன் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் மலையடிவாரத்தில் திரண்டனர்.

சுப்பிரமணியசுவாமி கோவில்

கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 

இங்கு தைப்பூச விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. இதையொட்டி தினமும் காலை, மாலையில சிறப்பு பூஜைகள், வேள்வி பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதைத்தொடர்ந்து தைப்பூச திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

மயில் வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். 

திருக்கல்யாணம்

அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமி ஊதாபட்டு உடுத்தியும் வள்ளி அம்மன் நீலபட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் நிற பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். விநாயகர் பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல், தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதையடுத்து மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 9 மணிக்கு சுவாமி - வள்ளி தெய்வானைக்கு மங்கல நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. 

அப்போது அங்கிருந்த கோவில் ஊழியர்களும் ஆதிவாசி மக்களும் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷமிட்டனர். 

சிறப்பு தீபாராதனை

அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஓதுவார்கள் திருப்பொற்சுண்ணம் பாடல் பாடினர். 

பாத காணிக்கை, சுவாமிக்கு மொய் எழுதும் நிகழ்ச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் வெள்ளை யானை வாகனத்தில் விநாயகர் வீரபாகு தேவர் எழுந்தருளினர். 

பஞ்சலோக யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய் வானையுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். 

பின்னர் அர்த்தமண்டபத்தில் சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

வளாகம் வெறிச்சோடியது

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் மற்றும் சிறிய தேருக்கு சிவாச்சாரியர்கள் பூஜை செய்தனர். 

கொரோனா பரவல் காரணமாக  பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட வில்லை. 

இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


ஆனால் மருதமலை கோவில் அடிவாரத்தில் உள்ள மலைப்பாதை வாசல் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அந்த படிக்கட்டு ஏறும் பாதை முன்பு பக்தர்கள் குவிந்தனர். 

அவர்கள், படிக்கட்டுகளில் சூடம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் மருதமலை அடிவாரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

வள்ளியம்மன் கோவில்

கோவை மருதமலையில் உள்ள பழமை வாய்ந்த வள்ளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.

தைப்பூச திருநாளான நேற்று காலையில் சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வயானை சப்பரத்தில் மருதமலை அடிவாரத்தில் திருவீதி உலா வந்தார். இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது 

 இதேபோல மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்ட தியான மண்டபத்தில் வேல் மட்டுமே பிரதானமாக வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. நேற்று வேலுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

கோவை

தைப்பூசத்தையொட்டி கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 

5 மணிக்கு முருகப்பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர் உள்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்கக்கவசம் சாத்தப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது.

 காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவில் வாசலில் பூ மற்றும் மாலைகள் வைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

இது போல் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது.

சிரவணமாபுரீஸ்வரர் கோவில்

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை சிரவணமாபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு வள்ளி -தெய்வானை உடனமர் முருகப்பெருமா னுக்கு வேத மந்திரங்கள் ஓத யாக பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

நேற்று காலை 9 மணிக்கு உற்சவமூர்த்தி முருகப்பெருமான்- வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். 

சிறப்பு பூஜை செய்த பிறகு திருத்தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. 


தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி விழா நடைபெற்றது. தேரோட்டத்தில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்