கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைதான இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;
கோவை
கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைதான இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரியார் சிலை அவமதிப்பு
கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை உள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு சிலர் அந்த பெரியார் சிலை யை சிலர் அவமரியாதை செய்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக போத்த னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதில் பெரியார் சிலையை 2 பேர் அவமதிப்பு செய்ததும், அவர்கள் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பெரியார் சிலையை அவமதித்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (வயது 26),
அவரது நண்பர் மோகன்ராஜ் (28) என்ற மோஸ்கி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தர விட்டார்.
இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.