நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்

வால்பாறை மார்க்கெட் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.;

Update:2022-01-18 21:45 IST
வால்பாறை

வால்பாறை மார்க்கெட் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

நகராட்சி மார்க்கெட் 

வால்பாறை தாலுகா பகுதி மக்களின் முக்கிய அங்கமாக இருப்பது நகராட்சி மார்க்கெட் பகுதி. இந்த மார்க்கெட்டில் மளிகை கடை, காய்கறி கடை, துணிக்கடை, நாட்டு மருந்துக் கடை, இறைச்சி, மீன், கருவாடு, கோழிக்கடை, பழைய இரும்பு கடை என்று அனைத்து விதமான கடைகள் உள்ளன.

குறிப்பாக வால்பாறையின் பெரிய பள்ளிவாசலும் இந்த மார்க்கெட் பகுதிக்குள்தான் அமைந்து உள்ளது. இதுதவிர இந்த மார்க்கெட் வழியாகதான் கக்கன்காலனி, காந்திநகர், திருவள்ளுவர் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 

நடைபாதை ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் மார்க்கெட் பகுதியில் கடை வைத்து உள்ளவர்கள் தங்களின் கடைகளுக்கு வெளியே நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதுதவிர ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பல்வேறு வியா பாரிகளும் நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இதனால் வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதி வழியாக குடியிருப்பு பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. நடைபாதையில் கடை இருப்பதால் அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

நடவடிக்கை வேண்டும்

இதனால் இந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலையும் நீடித்து வருகிறது. 

எனவே மார்க்கெட்டில் கடை வைத்து நடத்தி வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்