கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் கைது

கோவையில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்தது தெரியவந்தது.;

Update:2022-01-19 21:39 IST
சரவணம்பட்டி,

கோவையில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை 

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஆப்ரிக்க வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். 

அப்போது அந்த வாலிபர் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். 

ருவாண்டோ வாலிபர் கைது 

அதில் அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டை சேர்ந்த ஸ்டெபின்ஸ் (வயது 33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்டெபின்ஸ் கடந்த 2012-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. படிப்பதற்காக சேர்ந்து உள்ளார். பின்னர் இவரது விசா காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக கோவையில் தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
இதையடுத்து போலீசார் ஸ்டெபின்சை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வாட்ஸ்-அப் மூலம் விற்பனை

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கோவையில் கல்லூரி படிப்பை முடித்த ஸ்டெடிப்பின்ஸ் விசா காலம் முடிந்த பின்னரும் கீரணத்தம் பகுதியில் வசித்து வந்து உள்ளார். மேலும் அவர் கல்லூரி மாணவர் களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து உள்ளார். 

வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொள்ளும் அவர்களுக்கு, குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி கஞ்சா விற்பனை செய்து உள்ளார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். 

மேலும் செய்திகள்