தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் புகார் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் புகார் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் புகார் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
பயனில்லாத கழிவறை
கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் அலுவலகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் இந்த கழிவறைகள் பயனில்லாமல் இருக்கிறது. இதனால் கழிவறை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், கூடலூர்.
சாலையோரத்தில் மண் குவியல் (படம்)
கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து ஒன்னதலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் குடுமனை பகுதியில் சாலையோர வளைவில் மண் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கொட்டப்பட்டு உள்ள மண் குவியலை அகற்றுவதுடன், அங்கு மண்ணை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமன், கட்டபெட்டு.
விவசாயிகள் அவதி
சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே விவசாயிகள் காயப்போடும் விளைபொருட்களை மூட்டைக்கட்டி அதை பாதுகாப்பாக வைக்க இடம் இருந்தது. அந்த இடம் தற்போது பழுதடைந்து படுமோசமாக இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, பொள்ளாச்சி.
செயல்படாத ஆதார் மையம்
கூடலூரில் ஆதார் சேவை மையங்கள் சரிவர செயல்படுவது இல்லை. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பெண்கள், குழந்தை கள் இந்த மைய சேவையை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆதார் சேவை மையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கே.ராஜ், கூடலூர்.
வீணாகும் குடிநீர்
கோவை குனியமுத்தூர் பாலக்காடு சாலையில் தனியார் வங்கி உள்ளது. இதன் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் வீணாக சென்று கால்வாயில் செல்கிறது. பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இதுபோன்று தண்ணீர் வீணாவது வேதனையாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்.
சாகுல் ஹமீது, குனியமுத்தூர்.
தெருநாய்கள் தொல்லை
கோவை ஆவாரம்பாளையம், சித்தாபுதூர், காந்திபுரம், உக்கடம் உள்பட மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றால் பகலில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, கோவை.
விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெங்கடேசா காலனியில் அய்யப்பன் கோவில் செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாதாள சாக்கடை பணிக்கு சாலையை தோண்டிய பிறகு சீரமைக்கவில்லை. இதனால் சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
மகேஷ், வடுகபாளையம்
கழிப்பிட வசதி
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் டாப்சிலிப்பில் இருந்து கோழிகமுத்தி என்ற இடத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். முகாமிற்கு சென்று வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. மேலும் முகாமில் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கழிப்பிட வசதியும் இல்லை. எனவே அங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
ராம்குமார், பொள்ளாச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி 40-வது வார்டு ஆவாரம்பாளையம் காமராஜ்நகர் 2-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக புதர்களை அகற்றிய குப்பைகள் அங்கேயே விடப்பட்டு உள்ளதால் அதன் மூலம் அதிகளவில் கொசுக்கள் பரவி வருகிறது. எனவே அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
அரவிந்தன், ஆவாரம்பாளையம்.
குண்டும் குழியுமான சாலை
கோவை குனியமுத்தூர் 93-வது வார்டுக்கு உட்பட்ட அன்னம்மா நாயக்கர் வீதியில் பல இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால் அது சரியாக மூடப்படவில்லை. இதனால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குழிகளை மூட வேண்டும்.
அக்பர், குனியமுத்தூர்.