மாமல்லபுரம் கடற்கரையில் சேதமடைந்து கிடக்கும் கண்காணிப்பு கேமரா கம்பங்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கம்பங்கள் பராமரிப்பில்லாத காரணத்தால் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-01-20 17:08 IST
கண்காணிப்பு கேமரா கம்பங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரம் போலீஸ் துறையினருக்கு உதவிடும் வகையில் மத்திய சுற்றுலாத்துறை, சுவதேஷ் தர்ஷன் திட்டதின் கீழ் 40 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமரா கம்பங்கள் அமைத்து கொடுத்தது.

சுற்றுலா பயணிகள் போர்வையில் கடற்கரைக்கு வரும் வழிப்பறி திருடர்களையும், அங்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களையும், சுற்றுலா பயணிகளிடையே சில நேரம் மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பதால் இவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு போலீஸ் துறைக்கு உதவிகரமாக இருந்து வந்தது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள போலீஸ் துறை கட்டுப்பாடு மையத்தில் உள்ள கணினி பிரிவில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டு இருந்தன.

சேதமடைந்துவிட்டது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா கம்பங்கள் செயல்பாடு இல்லாமல் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கம்பம் கீழே விழுந்தவுடன் அதில் இருந்த சுழலும் கேமரா உடைந்து சேதமடைந்துவிட்டது. அதில் உள்ள வயர்களும் அறுந்து காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு பயன்பட வேண்டிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒரு சில ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிட்டது. எனவே குற்ற செயல்களை கண்காணிக்கும் வகையில் சேதமடைந்த கண்காணிப்பு கேமரா கம்பங்களை சீரமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்