‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-01-20 20:17 IST
வனவிலங்குகள் பாதிப்பு

கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து கிளப் ரோடு செல்லும் சாலையோரத்தில் தனியார் விடுதிகளில் இருந்து காலி மதுபாட்டில்களை  கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் எதிர்பாராமல் அந்த பாட்டில்களை மிதித்து காயமடைந்து வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே காலி மதுபாட்டில்களை வீதியில் வீசி செல்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், கோத்தகிரி.

காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

கூடலூர் ராஜகோபாலபுரம், கோத்தர்வயல் பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவை சில சமயங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் தாக்க முயற்சி செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. எனவே இங்கு, சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், கூடலூர்.


தொற்று நோய் பரவும் அபாயம்

கோவை ஆவாரம்பாளையம் ஜானகி அம்மாள் லே அவுட் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வாரி தொடர்ந்து பாராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சந்தோஷ், ஆவாரம்பாளையம். 

திறந்தவெளி தொட்டிகள் மூடப்படுமா?

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே குடிநீர் குழாய்களை இணைக்கக்கூடிய திறந்தவெளி தொட்டிகள் உள்ளன. மேலும் அருகில் அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளும் செயல்படுகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், அங்குள்ள திறந்தவெளி தொட்டிகளில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதை தவிர்க்க அந்த திறந்தவெளி தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், கூடலூர்.

பழுதடைந்து கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம்.

கோடநாடு காட்சிமுனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம். அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அதை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த எந்திரத்தை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செல்வி, கோத்தகிரி. 

சாய்ந்த மரம் அகற்றப்படுமா?

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள மரம் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சாய்ந்து விட்டது. நீண்ட நாட்களாகியும் மரம் அகற்றப்படவில்லை. இது அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய தடையாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த மரத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சந்திரன், ராமநாதபுரம்.

மின்கம்பிகளால் அபாயம்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே மாணவர் விடுதி உள்ளது. இதன் பின்புறம் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் விடுதியின் வளாகத்தை அடிக்கடி உரசி வருகிறது. இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு நடத்தி மின்கம்பிகளை உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கூடலூர்.

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

சூலூர் பழைய பஸ் நிலைய சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மணிகண்டன், சூலூர். 

கடும் துர்நாற்றம்

கோவை சிவானந்தா காலனி 50-வது வார்டு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை தெருநாய்கள் சாலை வரை சிதறடித்து விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனா, சிவானந்தா காலனி. 

வீணாகும் குடிநீர்

வால்பாறை கூட்டுறவு காலனி பழைய கோர்ட்டு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பு, வால்பாறை.


மேலும் செய்திகள்