பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்
பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா 2-வது தவணை தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சியில் வடுகபாளையம், காமாட்சி நகர் ஆகிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர். இதேபோன்று அந்தந்த ஒன்றிய பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கொரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி நகரில் 2 இடங்கள், வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில் தலா 3 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாம்களில் 125 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த முகாம் மட்டுமல்லாமல் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.