கொரோனா ஆலோசனைகளுக்கு கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்

கொரோனா ஆலோசனைகளுக்கு கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்;

Update:2022-01-20 22:15 IST
பொள்ளாச்சி

கொரோனா குறித்த ஆலோசனைகளுக்கு பொதுமக்கள் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2,832 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொள்ளாச்சி பகுதிகளில் தினசரி எண்ணிக்கை 200-யை தாண்டி விட்டது. நகர்புறங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.

 இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்கள், கொரோனா தொற்று குறித்த தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நகராட்சி பகுதிகளில் இதுவரைக்கும் கொரோனாவால் 2,832 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 7 நாட்களில் 270 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

 இதில் 14 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 6 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தினமும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தொடர்பு கொண்டு கண்காணித்து வருகின்றோம். 

அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவ உதவி ஏதுவும் தேவைப்படுகிறதா? மருந்து, மாத்திரைகளை சரியாக சாப்பிடுகிறார்களா? என்று கேட்கப்படுகிறது.

பொதுமக்கள் தொற்று அறிகுறி இருந்தால் எங்கு சென்று பரிசோதனை செய்வது, எத்தனை மணிக்கு செல்வது என்பது குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு மையத்தில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் பொதுமக்கள் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்