பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2022-01-20 22:16 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியனதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனிக்கு பாதயாத்திரை

கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (40). இந்த நிலையில் 2 பேரும் மதுக்கரை பகுதியை சேர்ந்த 70 பேருடன் பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிந்தனர்.

 இதற்கிடையில் பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இரவு அனைவரும் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்களை வாங்குவதற்கு ராஜசேகரன், ஜோதீஸ்வரன் ஆகியோர் நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் செல்லப்பம்பாளையம் பிரிவிற்கு வந்தனர். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் திப்பம்பட்டிக்கு புறப்பட்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

மோட்டார் சைக்கிளை ஜோதீஸ்வரன் ஓட்டி சென்றார். பின்னர் ராஜசேகரன் அமர்ந்து இருந்தார். சாலையை கடக்க முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் ஜோதீஸ்வரன் திடீரென்று பிரேக் போட்டதாக தெரிகிறது.

 அப்போது உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் காரின் முன் பக்க கண்ணாடியில் விழுந்து, தூக்கி வீசப்பட்டனர்.

பின்னர் காயமடைந்தவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கவுதம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாக இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்