நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அதிமுகவினரிடம் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேர்காணல் நடத்தினார்
அதிமுகவினரிடம் வேலுமணி நேர்காணல்;
கோவை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அ.தி.மு.க.வினரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்காணல் நடத்தினார்.
நேர்காணல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிக ளுக்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் ஏராளமானவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அவர்களுடன் நேர்காணல் நடத்தும் நிகழ்ச்சி கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி, விருப்பமனுதாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் செய்தார்.
அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
விருப்ப மனு
இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. பிரமுகர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு கட்சியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் சமூக இடைவெளி கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் அ.தி.மு.க.வினர் நேர்காணலில் கலந்துகொண்டனர்.