கோவை அருகே கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நல்லசாமி தலைமையில் நடந்தது

கோவை அருகே கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நல்லசாமி தலைமையில் நடந்தது;

Update:2022-01-21 21:39 IST

கருமத்தம்பட்டி

கோவை அருகே கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நல்லசாமி தலைமையில் நடந்தது. 

சந்தைப்படுத்தும் போராட்டம்

கள் போதைப்பொருள் அல்ல, உணவின் ஒரு பகுதி என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தி வருகிறது. 

அத்துடன் கள்ளுக்கு தமிழக அரசு விதித்து உள்ள தடையை நீக்கக்கோரி இந்த இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. 

10 லிட்டர் கள் 

கோவை அருகே உள்ள கண்ணாம்பாளையத்தில் உள்ள ஒரு  தென்னந்தோப்பில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடந்தது.

 ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமை தாங்கி னார். 

இதில் தென்னை மரங்களில் இருந்து 10 லிட்டர் கள் இறக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த கள்ளை நல்லசாமி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 

அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருக்கு கொடுத்தனர். அதுபோன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களும் குடித்தனர். 

பின்னர் செ.நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது

நீக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கள் இறக்கி, அதை சந்தைப்படுத்தும் போராட்டம் நடந்தது. 

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உடலுக்கு தீங்கை கொடுக்கக்கூடிய அயல்நாட்டு மதுபானங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, ஆரோக்கியம் கொடுக்கும் கள்ளுக்கு தடை செய்வது நியாயம் இல்லை. 

எனவே உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். மேலும் போலீசில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உள்ளது. 

பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும்போதுதான் இந்த பிரிவு தேவை. மதுவிற்பனை நடைமுறையில் இருக்கும்போது தேவை இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்