கல்குவாரி உரிமையாளரிடம் ரூ 15 பறித்த வழக்கில் 7 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கல்குவாரி உரிமையாளர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (வயது 53). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இவருடைய வீட்டிற்கு டிப்-டாப் உடையணிந்த 5 மர்ம ஆசாமிகள் காரில் வந்தனர்.
பின்னர் அவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுக்கூறி அடையாள அட்டையை காண்பித்து வீட்டில் இருந்து ரூ.15 லட்சம், மற்றும் பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலை உயர்ந்த செல்போன், சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிக்ஸ் ஆகியவற்றையும் எடுத்துவிட்டு வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வாருங்கள் என்று கூறி அங்கிருந்து சென்றனர்.
ரூ.15 லட்சம் பறிப்பு
ஆனால் அவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் இல்லை என்பதும், அதிகாரிகள் போல நடித்து ரூ.15 லட்சம் பறித்து விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கோவை ஈச்சனாரி பகுதியில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்த னர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
7 பேர் கைது
அதில் அவர்கள், கோவை சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 36), கணபதி மோகன்குமார் (30), சிவானந்தபுரம் மணி கண்டன் (37) என்பதும், கல்குவாரி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணத்தை அபேஸ் செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் ராமசாமி (47), பகவதிபாளையம் ஆனந்த் (47), காளம்பாளையம் தியாகராஜன் (42) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரத்தினபுரி மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.