கோவை
கோவை கலெக்டர் அலுவலகம் முதல் லங்கா கார்னர் வரை ரெயில் நிலைய சாலையில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டன.
இதற்கான சாலையின் ஒரு பகுதியில் 1,500 மில்லி மீட்டர் விட்டம் உள்ள ராட்சத குழாய் மற்றும் சிறிய குழாய் தனித் தனியாக பதிக்கப்பட்டன.
இதற்காக பள்ளம் தோண்டியதால் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் கோவை ரெயில் நிலையம் முன் பாதாள சாக்கடை யில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் தண்ணீர் செல்ல வழியாக சாக்கடை நீர் வெளியேறி கோவை ரெயில் நிலைய சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்த தண்ணீரை பீய்ச்சியடித்தபடி வாகனங்கள் செல்வதால் அந்த வழியாக செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் சாக்கடை நீர், ஏற்கனவே குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் சாலையில் சாக்கடை நீர் ஓடுவதால் ரெயில் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.
நேற்று காலை முதல் சாக்கடை நீர் சாலையில் ஓடியும், அதை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.