தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் கிடைப்பது எப்போது

குறைந்தபட்ச கூலியாக ரூ.425.40 நிர்ணயம் செய்து அரசு அறிவித்த ஊதியம் கிடைப்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.;

Update:2022-01-21 22:37 IST
வால்பாறை

குறைந்தபட்ச கூலியாக ரூ.425.40 நிர்ணயம் செய்து அரசு அறிவித்த ஊதியம் கிடைப்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

மலைப்பிரதேசமான வால்பாறையில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உண்டு. இங்கு 8 பெரிய நிறுவனங்களும், 30 சிறிய நிறுவனங்களும் தேயிலை எஸ்டேட்டை நடத்தி வருகின்றன. அதன்படி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த எஸ்டேட் பகுதிகளில் 22 ஆயிரம் நிரந்தர தொழிலாளர் களும், 3 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். இந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.351 வழங்கப்பட்டு வருகிறது. 

கூலி உயர்வு அறிவிப்பு

எனவே கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தொழிற் சங்கங்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.425.40-ஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்  தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியிட்டு 6 மாதங்கள் ஆகியும் அரசாணை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயர்த்தி அறிவிக்கப்பட்ட கூலி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-  

அரசாணை வெளியிடவில்லை

கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு கிடைக்கும் என்று காத்து இருந்தோம். இந்த நிலையில் குறைந்தபட்ச கூலியை அரசு அறிவித்தது. ஆனால் அரசாணை வெளியிடவில்லை. இதனால் எங்களுக்கு பழைய கூலிதான் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால் தொழிலாளர்கள் பலர் நம்பிக்கையை இழந்து வேறு வேலைக்கு சென்று வருகிறார்கள். தேயிலை பறிக்கும் பணியின் போது அட்டை கடிக்கும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் தற்போது அது மாறி யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை தாக்குதலுக்கு மத்தியில் நாங்கள் தினமும் வேலை செய்து வருகிறோம். 

உடனடி நடவடிக்கை

ஆனால் எங்களுக்கு கூலி உயர்வு அளித்துவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட ஏன் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து உயர்த்தி அறிவித்த கூலிக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இதற்கிடையே, தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்