தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் பகுதிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் பகுதிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
கிருமிநாசினி தெளிக்கப்படுமா?
கோவை சாய்பாபா காலனியில் உள்ள காவல்துறைக்கு உட்பட்ட பணியிடை பயிற்சி மையம் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 58-வது வார்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கவில்லை. எனவே பணியிடை பயிற்சி மையத்தில் கிருமிநாசினி தெளிக்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவழகன், கோவை.
ஒளிராத தெருவிளக்குகள்
பொள்ளாச்சி பல்லடம் ரோடு 5 ரோடு சந்திப்பு பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். 5 ரோடு சந்திப்பில் இருந்து டி.கோட்டாம்பட்டி பஸ் நிறுத்தம் வரை தெரு விளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. சில விளக்குகள் அருகில் உள்ள கட்டிடத்தை நோக்கி திரும்பி உள்ளன. இதனால் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக உள்ளதால் பெண்கள் நடந்து செல்வதற்கு பயப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், டி.கோட்டாம்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
கோவை லங்கா கார்னர் அருகே ரெயில் நிலைய சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசன், டவுன்ஹால்.
குப்பை குவியலை அகற்ற வேண்டும்
கோவை மாநகராட்சி 21-வது வார்டு பி.என்.புதூர் கோகுலம் காலனியில் உயர்நிலைப்பபள்ளி அருகில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி நிரம்பி வழிந்து அந்த பகுதி முழுவதும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், வடவள்ளி.
சாலையை சீரமைக்க கோரிக்கை
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி கனியம்வயல் மற்றும் கம்பாடிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
பசீர், தேவர்ஷோலை.
குடிநீரில் உப்பு நீர் கலப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றில் தண்ணீர் எடுத்து நகராட்சி பகுதி முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடிநீரில், உப்பு நீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் சுவை இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், பொள்ளாச்சி.
போலீஸ் நிலையம் வேண்டும்
கோவைக்கு உட்பட்ட பாப்பம்பட்டி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் பலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் எந்தவித பிரச்சினைக்கு சூலூர், காமநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர் போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாப்பம்பட்டி பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், பாப்பம்பட்டி.
வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி மெயின்ரோட்டில் இருந்து வடக்கிபாளையம் செல்லும் வழியில் பாலத்திற்கு முன் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுகிறது. காற்று வேகமாக வீசும்போது குப்பையில் இருக்கம் பிளாஸ்டிக் பைகள் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் படுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலதி, பொள்ளாச்சி.