‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பாக பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு
கூடலூர் அரசு மாணவர் விடுதியின் பின்புறம் மிகவும் ஆபத்தான நிலையில் தாழ்வாக மின் கம்பிகள் செல்வதாக கடந்த 21-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மண்டல பொறியாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை 10 மணிக்கு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்கம்பிகளை மிகவும் உயரமாக செல்லும் வகையில் பொருத்தினர். இதை கண்டு ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செல்வராஜ், கூடலூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கள்ளிமடை காமராஜர் நகரில் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட நிலம் பெரும்பான்மையாக ஆக்கிரமிப்பில் உள்ளது. சில பகுதிகள் எந்தவித பயன்பாடும் இன்றி கிடக்கிறது. எனவே அந்த நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா, நடைபாதை, சமுதாய கூடம் ஆகியவற்றை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவராஜ், கள்ளிமடை.
சேதமடைந்த நடைபாதை
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லத்துக்கு செல்லும் சாலையோரத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை உள்ளது. ஆனால் அங்கு ஒரு பகுதியில் நடைபாதை சேதமடைந்து அந்தரத்தில் தொங்குகிறது. அதில் நடந்தால் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, தீட்டுக்கல், ஊட்டி.
பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆங்காங்கே கழிப்பறைகள் இருந்தும், போதிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை உள்ளது. ஆகவே கழிப்பறைகளை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ரஞ்சிதா, எல்க்ஹில், ஊட்டி.
மின்விளக்குகள் ஒளிரவில்லை
கோவை நகர பஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்விளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை முறையாக ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம், கோவை.
கால்வாய் தூரவாரப்படுமா?
கோவை பீளமேடு புதூர் கொண்டசாமி தெருவில் உள்ள சாலையோரத்தில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மகி, பீளமேடு.
புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி கிராமத்தில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊர்களில் பாப்பம்பட்டி மிக முக்கியமானதாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் புகார் அளிக்க சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே பாப்பம்பட்டி பகுதிக்கு தனியாக போலீஸ் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பாம்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
கோவை உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியகுளம் அருகில் உள்ள பகுதி மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்தபா, உக்கடம்
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி ராஜா மில் ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களுக்கு குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், பொள்ளாச்சி.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
பொள்ளாச்சி உழவர் சந்தை பகுதிகளில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியர்கள் கல்வி அலுவலக சாலையின் ஓரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் அந்த வழியே நடந்து செல்வதற்கு பயப்படுகின்றனர். மேலும் பாட்டில்களை அங்கேயே வீசி எறிந்து அட்டகாசம் செய்கின்றனர். இதுகுறித்து பலமுறை போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயன், சூளேஸ்வரன்பட்டி.