5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது அதை வனத்துறையினர் டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்

5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது அதை வனத்துறையினர் டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்;

Update:2022-01-22 20:22 IST

போத்தனூர்

5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. அதை வனத்துறையினர் டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.

குடோனில் பதுங்கிய சிறுத்தை

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தெருநாய்களை அடித்த கொன்று அட்டகாசம் செய்தது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மதுக்கரை உள்பட 3 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறத்தை எந்த கூண்டிலும் சிக்கவில்லை.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 17-ந் தேதி வேலைக்கு வந்தனர். அவர்கள் குடோன் கதவை திறந்தபோது உள்ளே சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குடோன் கதவை மூடிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து குடோனை ஆய்வு செய்த போது உள்ளே 3 வயது ஆண் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது.

கூண்டில் சிக்கியது

இதையடுத்து மண்டல முதன்மை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணி யம் தலைமையில் வன அதிகாரி அசோக்குமார் மேற்பார்வையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 அவர்கள், குடோனின் இரு வாசல் பகுதியிலும் கூண்டுகள் வைத்தனர். அதற்குள் இறைச்சி வைக்கப்பட்டது. 

ஆனால் அதை சாப்பிட சிறுத்தை கூண்டிற்குள் செல்ல வில்லை. 

எனவே கூண்டில் உயிருடன் 2 நாய்கள் அடைக்கப்பட்டன. ஆனாலும் சிறுத்தை கூண்டுக்கள் வர வில்லை. 

ஆனால் குடோனில் இருந்த 6 அறைகளுக்கும் உலா சென்றபடி சிறுத்தை போக்கு காட்டி யது. 

இதனால் சிறுத்தையை சிக்க வைக்க கூண்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டது. 

இதன் காரணமாக 5 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாத நிலையில் சுற்றி வந்த சிறுத்தை தாகம் தணிப்பதற் காக கூண்டிற்குள் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை குடிக்க நேற்று முன்தினம் இரவு சென்றது. 

சிறுத்தை உள்ளே சென்றதும் கூண்டின் கதவு உடனடியாக தானே மூடிக்கொண்டது. இதனால் சிறுத்தை கூண்டில் சிக்கியது.

டாப்சிலிப்பில் விடப்பட்டது

இதையடுத்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் டாப்சிலிப் வனப் பகுதியில் கொண்டு விட முடிவு செய்தனர். 

அதன்படி சிறுத்தை கூண்டோடு தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றி பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். 

அங்கு அடர்ந்த வனத்திற்குள் சென்றதும் நேற்று காலை சிறுத்தை இருந்த கூண்டின் கதவு திறக்கப்பட்டது. 

கூண்டை திறந்ததும் சிறுத்தை உடனே தப்பி ஓடாமல் ஒரு சில நிமிடங்கள் கூண்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது. பின்னர் அந்த சிறுத்தை கூண்டில் இருந்து கீழே குதித்து வனப்பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடி மறைந்தது.

பொதுமக்கள் நன்றி

முன்னதாக சிறுத்தையின் உடல்நிலையை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர். 

இதில் சிறுத்தை ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கள் தெரிவித்தனர்.

 மதுக்கரை, குனியமுத்தூர் பகுதிகளில் தெருநாய்க ளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

சிறுத்தையை உயிருடன் பிடித்த வனத்துறையின ருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

இது குறித்து முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது

குடோனில் பதுக்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் பணி 5 நாட்களாக நடைபெற்றது. அப்போது சிறுத்தை எதுவும் சாப்பிட வில்லை. 

ஆனாலும் மயக்க ஊசி செலுத்தாமல் தானாக கூண்டிற்குள் சிறுத்தை சிக்கும் வரை காத்திருந்தோம். 

இறுதியில் தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க கூண்டுக்குள் சென்ற போது சிறுத்தை சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்