வால்பாறை நகராட்சி சார்பில் தூய்மை பாரத திட்ட பிரசாரம் தொடங்கியது.
வால்பாறை நகராட்சி சார்பில் தூய்மை பாரத திட்ட பிரசாரம் தொடங்கியது.;
வால்பாறை
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பாரத திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு கொரோனா ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, வீடுகளில் சுகாதாரமான கழிப்பிடங்கள் அமைத்தல், தெருக்களில் குப்பைகளை கொட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தூய்மை பாரத திட்டம் குறித்த செயல்பாடுகளை மக்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தூய்மை பாரத திட்ட சிறப்பு பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் இந்த பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.