நெகமம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

நெகமம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;

Update:2022-01-22 22:21 IST
நெகமம்

நெகமம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று  உறுதியானது. இதனால் தொற்று எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமைக்கரன் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் நெகமம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிலருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீஸ் நிலையில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் பெண் போலீஸ் ஒருவருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொற்று

அதனைத்தொடர்ந்து மேலும் சில போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நெகமம் போலீஸ் நிலையத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

 தொடர்ந்து தொற்று உயர்ந்து வருவதால் நெகமம் போலீஸ்காரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நெகமம் போலீஸ் நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் போலீஸ் நிலையம் முன்பு கயிறு கட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

 இதனால் நெகமம் போலீஸ் நிலையத்திற்கு வர பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். இதன் காரணமாக நெகமம் போலீஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறுவதற்கு வசதியாக போலீஸ் நிலைய வளாகத்தில் போலீஸ்காரர் ஒருவர் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகள்