ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த ரூ.5 கோடி நிலம் மீட்பு
ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.;
5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஏரி நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக படப்பை குணா ஆக்கிரமித்திருந்ததாக கூறப்படுகிறது.
மீட்பு
இந்த இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், வருவாய்த்துறையினர் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் எந்திரம் மூலம் சமன் செய்து மீட்டனர்.
இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருந்த ரூ.300 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் சனிக்கிழமைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.