கோவையில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின

கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update:2022-01-23 21:34 IST
கோவை
கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

முழு ஊரடங்கு 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன்படி 3-வது ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து கோவை டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, உக்கடம், பெரியகடை வீதி, சிங்காநல்லூர், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, திருச்சி ரோடு, பூமார்க்கெட், ஆர்.எஸ். புரம், சாய்பாபாகாலனி உள்பட மாநகர் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

சாலைகள் வெறிச்சோடின

அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ஆம்னி பஸ்கள் நேற்று இயக்கப் படவில்லை. இதையடுத்து சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பஸ் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதுபோன்று சாலைகளும் வெறிச்சோடின. 

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், உழவர் சந்தைகள், டி.கே.மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. அவினாசி ரோடு, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்களில் 700 போலீசாரும், புறநகர் பகுதியில் 500 போலீசார் என 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவையில் முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

போலீசார் சோதனை

போலீசார், சாலைகளில் வலம் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மருந்தகங்கள் செல்லும் பொதுமக்களிடம் டாக்டர்களிடம் பரிந்துரை சீட்டு காண்பிக்கும்படி கூறினர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்களிடம் திருமண அழைப்பிதழை காட்டும் படி கூறினர்.

எவ்வித காரணமும் இல்லாமல் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் வலம் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அத்துடன் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் வலம் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

கிரிக்கெட் விளையாடினர்

முழு ஊரடங்கு என்றாலும் மருந்தகங்கள் திறந்து இருந்தன. காலை நேரத்தில் ஒருசிலர் கடைகளுக்கு முன் அமர்ந்து பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்தனர். ஊரடங்கை கண்காணிக்க போலீசார் முக்கிய சாலைகள், தெருக்களில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். 

மேலும் மாநகரில் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொண்டனர். சாலைகள் வெறிச்சோடியதால் பல இடங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் கூடி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர். 

சிலர் தங்களது வீடுகளுக்கு முன் அமர்ந்து தாயம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் சைக்கிள்களில் காந்திபுரம் மேம்பாலம் உள்பட சில இடங்களில் வலம் வந்தனர்.

உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி

உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சிலர் ஆன்லைன் மூலம் உணவுகளுக்கு ஆர்டர் கொடுத்தனர். இதனால் உணவினை குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுமக்களிடம் வழங்க உணவு வினியோக ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர். சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.

துணை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா பட்டேல் ரோடு, ஒப்பணக்கார வீதி, உக்கடம் உள்பட மாநகர் பகுதியில் முழு ஊரடங்கு குறித்து ஆய்வு செய்தார். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு அவர் ரூ.500 அபராதம் விதித்ததுடன் முகக்கவசம் அணிவதன் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் செய்திகள்