பொள்ளாச்சியில் சாலையின் நடுவே தாறுமாறாக ஓடிய அரசு பஸ்
பொள்ளாச்சியில் சாலையின் நடுவே அரசு பஸ்் தாறுமாறாக ஓடியது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வேட்டைக்காரன்புதூரை நோக்கி சென்றது. மீன்கரை சாலையில் சீனிவாசபுரம் அருகே பஸ்சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் அரசு பஸ் சிறிது தூரம் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி சென்றது. இதனால் பஸ்சில இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
சாலையில் நடுவே அரசு பஸ் தாறுமாறாக ஓடிய காட்சியை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.